கிரேதாயுகத்தில் இத்தலத்தில் ஆதிசேஷன் மகாவிஷ்ணுவை நோக்கி தவம் செய்தான். பெருமாள் காட்சி தந்து, தமது சயனமாக ஏற்றுக் கொள்வதாக அருள்புரிந்தார். அதனால் இத்தலம் அவனது பெயரால் 'நாகன்பட்டினம்' என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் 'நாகப்பட்டினம்' என்று மாறியதாகக் கூறப்படுகிறது.
மூலவர் நீலமேகப் பெருமாள் என்ற திருநாமத்துடன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உத்ஸவர் திருநாமம் சௌந்தர்யராஜன். தாயாருக்கு சௌந்தர்யவல்லி என்னும் திருநாமம். நாகராஜன், திருமங்கையாழ்வார் ஆகியோருக்கு பகவான் பிரத்யக்ஷம்.
இக்கோயிலில் உள்ள அஷ்டபுஜ நரசிம்மரின் வெண்கலச் சிலை மிகவும் அபூர்வமான ஒன்று. அவரது ஒருகை பிரகலாதன் தலைமீதும், மற்றொரு கை அபயஹஸ்தமாகவும், மற்ற கைகள் ஹிரண்யகசிபுவை வதம் செய்வது போலவும் இருக்கும் அழகிய சிலை.
திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|